Tuesday, February 24, 2009

ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி

 

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் கதையைப் போலத்தான் என் வாழ்க்கையும் என்றாலும், நான் அந்தளவு போராடவில்லை என்றே நினைக்கிறேன் என இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.
இரட்டை ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற பின்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பல நாட்டு தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டி:

'ஸ்லம்டாக் மில்லினர்' இயக்குனர் இந்தியாவை இதற்கு முன் பார்த்ததில்லை என்று கூறியிருந்தார். மும்பை சேரிப் பகுதி குறித்த அவரது படத்தில் பங்கேற்க நீங்கள் தயங்கினீர்களா?

முதலில் டேனி பாய்ல் திரைக்கதையை அனுப்பி வைத்தார். ஆனால் அதை படிக்க எனக்கு நேரமில்லை. இயக்குனர் சேகர் கபூர் என்னிடம் பேசினார். டேனி தனது நண்பர் என்றும் அவரை காத்திருக்க வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் பின் சில மாதங்களில் இயக்குனர் அனுப்பிய 'டிவிடி'யை பார்த்தேன். அதில் படம் குறித்த தகவல்கள் பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டேன். பின்னர் மூன்று வாரங்களில் இசையமைத்துக் கொடுத்தேன்.

இந்தப் படத்தின் கதை உங்கள் வாழ்க்கையைப் பிரதிபலித்ததா?
ஒரு விதத்தில் ஆமாம்... ஆனால் இந்த அளவுக்கு நான் போராடவில்லை என்றே நினைக்கிறேன். நானும் நடுத்தர குடும்பத்தில்தான் பிறந்தேன். அப்போது பல விஷயங்கள் எனக்குக் கிடைக்காமலே போய்விட்டன. இப்போது ஹாலிவுட்டில் உங்கள் முன் அமர்ந்து பேசுகிற அளவுக்கு வந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இதற்குப் பின்னால் பெரும் போராட்டங்கள் இருந்தது உண்மைதான்.

பாய்ல் உங்களிடம் எந்த மாதிரியான இசையை எதிர்பார்த்தார்?
சென்டிமென்ட், சோகமான இசையே வேண்டாம் என ஆரம்பத்திலேயே அவர் கூறிவிட்டார். சில காட்சிகள் படத்தில் சோகமாக இருக்கும். அதைக்கூட மாற்றும் வகையில்தான் இசை அமைந்திருக்கும். படம் பார்க்கும் போது மலை உச்சியில் இருந்து விழுவது போலவும், பின்னர் சிறகை விரித்து பறப்பது போலவும் இருக்கும். மொத்தத்தில் தன்னம்பிக்கையை வலியுறுத்தும் விதத்தில் இருக்கும் அந்த இசை.
'ரோஜா' படம் பல விருதுகளை பெற்ற போது மிகப் பெரிய ஆச்சர்யமாக இருந்தது. உண்மையில் இப்போதுதான் முழுவதுமாக ஓர் ஆங்கில படத்தில் பங்கேற்றுள்ளேன். இது புதிய அனுபவம். இனிமையாக, த்ரில்லிங்கான அனுபவம்

 

நீங்கள் முதலில் பெற்ற சம்பளம்?
முதலில் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் பிளேயரை இயக்குவதற்காக சம்பளம் பெற்றேன். தினம் ரூ.50 கொடுத்தார்கள். பின்னர் ஒரு போட்டோ லேப் விளம்பரத்துக்கு இசையமைத்தேன். விளம்பரங்களில் பணம் கிடைத்தது. அதன் மூலமாக சினிமாவில் நுழைந்தேன்.

ஒரு ஆண்டில் எத்தனை படத்துக்கு இசையமைப்பீர்கள்?
சில சமயம் எட்டு படங்களை முடிப்பேன். ஒரு சில ஆண்டுகளில் இரண்டு படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன். பாலிவுட்டில் ஒரு சிலர் ஒரே ஆண்டில் 30 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

எந்த ஹாலிவுட் படத்தில் பணியாற்றியது சுவாரஸ்யமாக இருந்தது?
எலிசபத்' படத்திற்காக இது வரை எந்த இசையமைப்பாளரும் முயற்சித்திராத புதிய பாணியில் இசையமைத்தேன் என்றார் ரஹ்மான்.

2 comments:

  1. சுவாரஸியமான பேட்டி தேவா....

    ReplyDelete
  2. இன்னும் சில நாட்களில் ஏ.ஆர். ரகுமானின் ஒரு இசைய பயணம் என்ற தன்னம்பிக்கை ஊட்டும் புத்தகம் வெளிவர நிறைய வாய்ப்பிருக்கிறது.

    இது இன்னுமொரு அக்னி சிறகுகள்...

    ReplyDelete