Tuesday, February 3, 2009

தமிழா! தலைகுனிந்து நில்!

நேற்று அகஸ்மாத்தாக டி.வி.யின் முன் அமர்ந்து ம்தியம் சாப்பிட ஆரம்பித்தேன்.
கிரிக்கெட் மாட்ச் நேரடி ஒளிபரப்பு.நம்மதான் கிரிக்கெட்னா ஆணிஅடிச்சு உக்காந்திடுவோமே!

சோத்தையும் முடிச்சு ஒரு பாயையும் 4 தலகாணியும் போட்டு (கீழே படுத்துக்கிட்டே டி.வி. பாக்கிறதுதானே வசதி).....

,வாங்கிவந்த பலாச்சுளையில் 6 சுளையை தட்டில் வைத்து,.........
உக்கார்ந்து இருக்கோமா படுத்து இருக்கோமான்னு தெரியாத ஒரு நிலையில் தலகாணி மேல் சாய்ந்து மாட்ச் பார்க்க ஆரம்பிச்சேன்!!

கொஞ்ச நேரத்தில் ஆனந்தமான பரவச நிலை! அண்ணன் சேவாக் ஒரு பக்கம்,யுவராஜ் ஒரு பக்கம்! ஒரே வாண+வான வேடிக்கைதான்!!!
ஊடே ஊடே மாட்ச் நடக்கிற ஊரைக்காட்டுகிறான்,அது என்னங்க ஒரே கிளப்களும்,பளபளப்பான கட்டிடமும்,வெளிநாட்டு பயணிகளும்!!-உடனே அங்கே போகணும்போல...இருந்ததுங்க...

இதுல ஏதாவது சோகமா தெரிஞ்சதா உங்களுக்கு? இல்லைதானே!!

இதுதாங்க இப்ப என்னுடைய, நம்முடைய உண்மை நிலை!

செத்த வீட்டுல ரெண்டுநாள்,ஒருவாரம் அழுதுவிட்டு அப்புறம் எப்பவும் போல சோறாக்கி சாப்பிட்டு வேலைக்குபோகும் சராசரி மனிதர்தானே நான்..நாம் எல்லாம்.

இதை பகிரங்கமாக சொல்ல வெட்கப்பட்டாலும் உண்மை இதுதானே!!
மேலே நான் எழுதியதுபற்றி என் அன்பு சகோதரர்கள் யாரும் வருத்தப்படவேண்டாம்.

இனி விஷயத்துக்கு வருவோம்!

ஒன்றும் நடக்காததுபோல் இந்திய அணி இலங்கை செல்வதும் இந்தியாவும்,இலங்கையும் விளையாடுவதும்,ஒரு நிமிடம் நினைவுக்கு வந்தவுடன் தொலைக்காட்ச்சிபெட்டியை அணைத்து விட்டு அமர்ந்தேன்.

ஒரு பாகிஸ்தான் இந்தியாவுக்கு கிரிக்கெட் விளையாட வரமாட்டேன் என்று கூறுகிறான்.
ஆனால் இனப்படுகொலை நடக்கும் இலங்கைக்கு நாம் போய் சந்தோஷமாக விளையாடி வெற்றிகளை அனுபவிக்கிறோம்.

இதே இலங்கை நாட்டின் ஒரு பக்கம் பயங்கர இன அழிப்புப் போர்!
இன்னொருபுறம் அப்படியா?சண்டையா? எங்கே நடக்குது என்று கேட்கும் அளவுக்கு கேளிக்கையும்,விளையாட்டும்.
நினைக்கும்போது மனம் கசந்துபோய் இனம் புரியாத கவலை மனதில் ஏற்பட்டது..

தமிழர்கள் இந்தியாவிலும் சிறுபான்மையினர்தானோ?
இங்கும் நம் குரல் செல்லாதோ?

ஊடகங்கள் வழி பார்க்கும் எவரும் இலங்கையில்
ஒரு இனம் ஒடுக்கப்படுகிறது,

குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள்!

பெண்கள் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள்.
தமிழ் மக்கள் அழிக்கப்படுகிறார்கள் என்று நம்ப் முடியுமா?

ஒருநாட்டின் அரசே பயங்கரவாதத்திலும்,இனஒழிப்பிலும் ஈடுபடும் போதும்,
அதற்கு ஆதரவாக ஊடகங்களும்,உலகநாடுகளும் செயல்படும்போதும்

நாம் நமது சகோதரர்களை காப்பாற்ற முடியாமல் கூக்குரல் இடமட்டுமே முடிந்த இழிநிலையில் இருப்பதும் கேவலமானதுதான்.

இன்னிலை தொடர்ந்தால் தமிழர் வரலாறு உலக வரலற்றின் கருப்புப்பக்கங்களில் இரத்த்கறை கொண்டு எழுதப்படும்.

இலங்கை தன் கலாச்சாரம்,பண்பாடு,வளம் எல்லாவற்றையும் இழந்து கொடுங்கோல் ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு,உணவின்றி இறக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமையையே அடையும்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து சொல்லடா! என்று எட்டுத்திசையெங்கும் முழங்கிய
மகாகவி பாரதியும் கண்ணீருடன் இதைப்பார்த்துக்கொண்டுதான் இருப்பானோ?

No comments:

Post a Comment